தாய் நாட்டிலிருந்து பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக குடும்பத்தை பிரிந்து வாழ்வதால் உறவினரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிர்ப்பதையும் அதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் வெளிநாட்டிற்குச் சென்று சரியான வேலையாக அமைந்து பொருளீட்டி மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பற்றியும் ஹிமானா சையத் தம் சிறுகதைகளில் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். மேற்கண்டவற்றை விரிவாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஹிமானா சையத் சிறுகதைகளில் அதிகமாக வெளிநாட்டில் பணிபுரிவோரின் வாழ்வியல் சிக்கல்கள் கதைக்கருவாகக் காணப்படுகின்றன. இதற்கு அவரே பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.
“ஒரு நூலை வெளியிடும் போது அந்த நூலின் வெற்றி விற்பனை சார்ந்ததாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இதுவரை வெளிவந்த என் நூல்களில் சுமார் ஐம்பது சதவீதம் அரபுநாடுகள், புருனை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ள உண்மை தெரிகிறது. எனவே என் சிறுகதைத் தொகுதிகளில் இந்தச் சகோதரா்களுக்காக அவா்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைகளைச் சேர்ந்தாக வேண்டிய புரிந்துணா்வும் கடமை சார்ந்ததாகி விடுகிறது ”1
என்பதாக “உங்களோடு ஒரு நிமிடம்…” என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீதான மோகம்
கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குறுகிய காலத்தில் அதிகமாகப் பொருளீட்ட வேண்டும் என்ற பேராசை ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இந்தச் சமூக அவலம் பெரிதும் வாட்டுகிறது. ‘பாதை’ என்னும் கதையில் கபீர் என்பவரின் மனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை வட்டமிடுவதை ஹிமானா சையத்,
“உள்நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்வதை விட சில ஆண்டுகள் வெளிநாடு சென்று திரும்ப வேண்டும் என்பதைச் சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது ”2
எனக் காட்டுகிறார்.