பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இச்சிறுகதையை அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் நவயோதி யோகரட்ணம்.
… அவள் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. படி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலீஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான்….
கண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம்.
அதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில்.
கிழக்கு முக வாசல்; மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது உயிர் வாழ்கிறது’ என்று வெளியூரில் பேச்சு. வருஷந்தோறும் வருகிற விழாக்களுக்கு அதுவே நெய்வேத்திய ஸ்தலம். தனவான்களுக்கு நோய் நொடி கண்டால் அங்கு விசேஷ அன்னதானங்களும் உண்டு. அரிசிப் பஞ்சமிருந்தும் இப்படி அன்னதானங்களுக்கு ஈடுகொடுக்கிற சூத்திரம் விநாயக மூர்த்திக்கே வெளிச்சம். ஆனால், அவரோ வாய் விடாச்சாதி. கேட்பானேன்? பிச்சைப் பட்டாளங்களுக்குக் காலகதியில் அதுவோர் அன்ன சத்திரமாகவே விளங்கியது.
தூர ஒரு மேட்டுத் திடல். அந்த மேட்டுத் திடலில் ஏலவே இடம் பிடித்துக் ‘குடித்தனம்’ நடத்துகிற தோட்டிகளுடன், அன்று வெள்ளியும் வெறு வயிறுமாக வந்து சேர்ந்தாள் மூக்காயி.
அவன் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. புடி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலிஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டத்துச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான். சங்கம் அவனுக்காகப் போராடியது. என்றாலும், சங்கத்துக்கும் தெரியாமல் எங்காவது கோயில் குளத்தை அண்டி வயிறு வளர்க்கலாம் என்ற தீர்மானத்துடன் குழந்தை குட்டிகளோடு நகரத்தைத் தேடி வந்தாயிற்று. கடைசியாக இந்த விநாயமூர்த்தி மேட்டுத்திடல்தான் கைகொடுத்தது.
இந்த புதுக் குடித்தனத்தைக் கண்ட சிறுவர்கள் ‘கிலு முலு’த்துக்கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் நிர்வாண கோலத்தைப் பற்றிய கூச்சம் அவர்களுக்குத் தட்டியபோதும், அந்தப் புதுத் தம்பதியை விடுப்புப் பார்க்கவே ஆசை, சிறுவர்களின் தாய்மார்கள் தங்கள் பணிவிடைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு வந்த தம்பதியோடு அளாவத் தொடங்கினார்கள்.
‘எங்கிட்டால வர்றீங்க?’ என்று கேட்டாள் ஆத்தா.
‘மடக்கும்பரத் தோட்டத்திலேந்து வரோம்’ என்றாள் மூக்காயி.
‘அம்மாடி. பெறுமாத வயித்துக்காரியாச்சே. அந்தால அக்கம் பக்கமா எடங் கெடைக்கலியா?’
‘ஒழைக்கிறவங்களே லயங்கள்லே அடைஞ்சிட்டிருக்கப்போ, ஒழைச்சுக்க வக்கில்லாத நம்பளுக்கு எடங்கெடைக்குங்களா?’