– கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. –
அண்மையில் வெளியான தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.
நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது ‘எனக்காகக் காத்து நிற்பீர்களா?’ என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.