வாழ்வை எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கிய டொமினிக் ஜீவாவிடமிருந்து கற்றதும் பெற்றதும்! வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

வாழ்வை  எழுதுதல் 01: பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும்! வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை!

அவரை  முதல் முதலில் நான் சந்தித்த இடம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி.  அங்கு நான் கற்றவேளையில்  அதன்  பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரி என மாற்றம் கண்டது. நீர்கொழும்பிலிருந்து ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று அக்கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து  படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் விடுதியின் சார்பில் எழுத்தாளர் டொமினி ஜீவாவை அழைத்து,   கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேடையேற்றி பேசவைத்தார்கள். ஒரு துவிச்சக்கர வண்டியில் வந்து பேசினார்.  வெள்ளை நிறத்தில் வேட்டியும் நேஷனலும் அணிந்திருந்தார். எனக்கு யாழ்ப்பாணம் அப்போது புதியது. அங்குதான் முதல் முதலில் அவரையும் பனைமரத்தையும் பார்த்தேன். எனக்குத் தெரியாத சங்கானை சாதிக்கலவரம் பற்றியும் ஆப்ரகாம் லிங்கன் பற்றியும் அவர் அன்று பேசியது மாத்திரமே இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அந்த வருடம் 1963.

அவர் அன்றுசொன்ன சாதிவேற்றுமை சமூக ஏற்றத்தாழ்வு என்பன பற்றிய புரிதல் அக்காலத்திலேயே அந்தக்கல்லூரி அமைந்திருந்த அரியாலைப்பிரதேசத்தில் நேரடியாக எனக்கு  கிட்டியது.  எந்தவொரு  சொந்த பந்தங்களும் இல்லாதிருந்த அந்தப்பிரதேச வாழ்க்கை எனக்கு,   எனது பூர்வீக ஊர்மீதும் வீட்டின் மீதும் ஏக்கத்தையே வளர்த்தது. என்னுடன் படித்த எனது மாமா மகன் முருகானந்தனுக்கும் தனது குடும்பத்தை விட்டு வந்த ஏக்கமிருந்தது. 1965 இல் அங்கிருந்து விடைபெற்று ஒரு நாள் இரவு புறப்படும் தபால் ரயிலில் கொழும்பு வந்து எங்கள் ஊர் திரும்பிவிட்டோம்.

அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டுவரையில் யாழ்ப்பாணத்தையே நான் திரும்பிப்பார்க்கவில்லை. சுமார் பத்தாண்டுகளின் பின்னர் என்னை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் அவர்.  ஒரு மாணவனாக  அங்கு சென்று திரும்பிய என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாக மாற்றி  மீண்டும்  அங்கு அழைத்து எனது முதல் கதைத்தொகுதிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகநிகழ்வு நடத்தி பாராட்டியவர்தான் அவர்.

Continue Reading →