யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்-பாரதி.
அமிழ்தினும் இனிய தமிழ்மொழி கணினியிலும், இணையப் பயன்பாட்டிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படினும், தமிழ்மொழி தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாதநிலை காணப்படுகிறது. இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களைத் தமிழ்க்கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றம்பெற வைக்கவேண்டும். தொழில்வசதிகள் பெருகிட தாய்மொழிக்கல்வி மிகவும் இன்றியமையாததாகும். இதற்குப் பள்ளிக்கல்வியில் கணினிவழி தமிழ் கற்பித்தல் அவசியம் என்பதை இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது.
முக்கியக் குறிப்புகள் – ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தமிழ்வழிக் கல்வி, தமிழ்க்கணினி, குறுஞ்செயலிகள், அறிவியல்கருவிகளில் தமிழ்மொழி
இன்றைய ஆங்கிலவழிக் கல்வி பணிவாய்ப்பினை முழுமையாகப் பெற்றுத் தருவதால் மக்கள் ஆங்கிலவழிக் கல்வி முறையினைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களிடம் முழுமையான ஆங்கிலவழிக்கல்வி இருப்பினும் அவர்களால் தாய்மொழியில் புரிந்து படிக்கும் அளவு படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர முடிவதில்லை. இதனால், மனப்பாடம் செய்து பயிலும் முறை பெரும்பான்மையான மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை காணப்படுவதால் படைப்பாற்றல்திறன் குறைவாக அவர்களிடம் காணப்படுகிறது. தாய்மொழியில் கல்வி பெறும் மாணவர்களிடம் தமிழ்வழிக் கணினிக் கல்வியை முழுமையாக அளித்திடும்போது படைப்பாற்றல் திறனுடன் பல மென்பொருட்களையும், சமுதாயத்திற்குப் பல சாதனைகளையும் அளிக்க இயலும். தமிழ்க்கணினி என்பது வெறும்இலக்கியம், உரைநடை, கட்டுரை, கடிதங்கள், பண்பாடு போன்றவற்றை மட்டும் கற்றுத் தருவதன்று.