‘காந்தியப் பண்பும் ‘வெண்முகில்’ நாவலும் ‘ என்னும் தலைப்பில் எழுத்தாளர் காண்டேகரின் நாவலான ‘வெண்முகில்’ பற்றிய திருமதி.பா.சுதாவின் ஆய்வுக்கட்டுரை ( தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலொன்று; பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது) காண்டேகர் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி விட்டதெனலாம்.
என் பதின்ம வயதுகளில் வாசிப்பு வெறி பிடித்துத் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களில் காண்டேகருக்கு முக்கியமானதோரிடமுண்டு. மராட்டிய எழுத்தாளரான காண்டேகர் தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களிலொருவராக அறுபதுகளில், எழுபதுகளில் விளங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கா.ஶ்ரீ.ஶ்ரீயின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான காண்டேகரின் நாவல்களைத் தமிழ் வாசகர்கள் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார்கள். காண்டேகரின் பல படைப்புகள் பல தமிழில் வெளியான பின்னரே மராத்தியில் வெளியாகின என்று எழுத்தாளர் ஜெயமோகன் காண்டேகர் பற்றிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அவ்வளவுக்குக் காண்டேகரின் புகழ் தமிழ் இலக்கிய உலகில் பரவியிருந்தது.