– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாடு பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத்தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. மேலும், அது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், வாழ்வின் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்புகள் என்பனவற்றைச் சுட்டி நிற்கிறது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்கள், கருவிகள் போன்றவையும் இப்பண்பாட்டில் அடங்கும்.
பண்பாடு – பொருள் விளக்கம்
பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த தொகுதியே பண்பாடு ஆகும்.