( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)
பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வை கவிதையில் பாடு பொருளாக்கியவன். அதற்கு முன்னர் கவிதை நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. சமயச் சார்புடையதாக இருந்தது.
பாரதிதான் அரசியல் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டுவந்தவன். “ எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நம் தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகிறான் ” என்று கூறியவன் பாரதி.
எனவே இலக்கியத்தில் நவீனத்தை புகுத்தியவன் பாரதி. அதாவது நவீனத்தை பாடு பொருளிலும் எடுத்துரைப்பு முறையிலும் புகுத்தி புதுமை செய்தவன் பாரதி. இலக்கியத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியவன் பாரதி. அவன் காட்டிய வழியில் புதிய யுகத்திற்குள் படைப்பாளிகள் புகுந்தனர்.
இந்தப்பின்னணிகளுடன் முருகபூபதி எழுதியிருக்கும் புதிய நூல் இலங்கையில் பாரதி. பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது? பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.