உலகில் வேறெங்கும் இல்லாத சாதியப்படிநிலை இந்தியாவில் மட்டும் எப்படி தோன்றியது. இதற்கான விடைகளைத் தேடி ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கின்ற கற்பிதத்தை கற்பனையில் ஏற்றுக்கொண்டால் ஒழிய ஐம்புலன்களால் உணர முடியாத சாதியப் பண்பாட்டை இந்திய மூளைகள் எப்படி சுமந்தன? சங்க இலக்கியங்களில் சாதிப்படிநிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல் உணர்த்தும் படிநிலைகள் இடைசெருகலோ என்ற ஐயம் தொடர்கிறது. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற கூற்று மட்டும் முரணாக அமைகின்றது. சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில் இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின் சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு ஆதாரமாகும். எனினும் சாதியப்படிநிலையின் தோற்றம் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு என்பதில் முரணில்லை. எனினும் இக்கட்டுரை விளக்க முயல்கின்ற பொருண்மை எதுவெனில் அந்நியராக நுழைந்த ஆரியர்களின் கற்பிதத்தை இந்திய மூளைகள் எதற்காக தங்களின் பண்பாடாக ஏற்றுக்கொண்டன? ஒரு அந்நியரின் கற்பிதம் எப்படி இந்தியர்களின் தனித்துவப் பண்பாடாக உருமாறியது? இவற்றிற்கான விடயங்களே இக்கட்டுரை. ஆரியர்கள் இந்திய மக்களை திராவிடர்கள் என்ற சொல்லில் குறிப்பிட்டதைப்போல இந்தக் கட்டுரையிலும் திராவிடர் என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.
சமூகவிஞ்ஞான விளக்கப்படி சமூகத்தில் எந்த ஒன்றைப் பற்றிய ஆய்விற்கும் உற்பத்திமுறை பற்றிய ஆய்வு அடிப்படையாகும். சாதியப் பண்பாடு பற்றிய ஆய்விற்கும் இந்த வழிமுறை அவசியமாகின்றது. மனிதகுல வரலாற்றில் சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி படிநிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.