பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்
பதிவுகள் மே 2008 இதழ் 101
பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும் கண்கூடு. இத்தன்மை ஒட்டு மொத்த சமூகத்தின் நாளைய எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும். எந்த ஒரு மனிதனும் இன,பால் அடையாளங்களினாலோ அல்லது சாதிய , வர்க்க , மத வேறு பாடுகளினாலோ குறைவாக மதிப்பிடப் படுதல் , ஆதிக்க மனோ நிலைக்கு வித்திடுமொன்றாகிப் போகின்றது. ஆதிக்க மனோ நிலை அடிமைத் தனம் உருவாவதற்கு காரணமுமாகின்றது
அதுவும் நமது கலாசாரத்திற்குள் இருந்தும் நமது வாழ்வியலில் இருந்தும் பெண் எந்தெந்த இடத்தில் எல்லாம் வேதனைக் குள்ளாக்கப்படுகின்றாள் என்பதை இக்கட்டுரை பேசுகின்றது. காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் என்று பாரதி சொன்னதற்கிணங்க நமக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணங்களை உணராததையே இயல்பாக மாற்றிக் கொண்டிருப்பதையும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. சம்பவங்களின் இடமும் சாட்சியங்களின் நிகழ்வும் பிரதேச அரசியலை பேசினாலும் அதன் உணர்வுகள் பிரதேச இன எல்லைகளை கடந்து ஒடுக்கப் படுபவர்களின் அடிமைத் துயரங்களை சொல்லி ஆதிக்க மனோ நிலைக்கெதிரான குரலாக, பொதுமையடையக் கூடும்
சுயமிழத்தல்
மனிதன் எனும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலம் காலமாக இரண்டறக் கலந்தபடியும் பெண் தன் சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப் பட்ட படியும் இருந்திருக்கின்றாள். அவளுக்கான மனித இருப்பு சமூகம் கலாசாரம் , பண்பாடு என்னும் பெயரால் மறுக்கப் பட்ட படியே இருக்கின்றது.
காலம் காலமாக முன்னோர்களால் சமூக நல்வாழ்விற்காக வடிவமைக்கப் பட்ட கலாச்சாரங்களும் , பண்பாடும் மாறுகின்ற காலங்களின் போது அதன் மாறுதல்களை மறந்து மறுத்து காலாவதியாகி வெறும் சடங்குகளாக பலநேரங்களில் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது. வெற்றுச் சடங்குகள் சிந்தனையின் திசை மாற்றி மேலும் மேலும் பெண்ணை புதிய மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியாதவளாக உறைய வைத்து விடுகின்றது ஆயிரம் அறிவியல் தொழில் நுட்பங்களின் பின்னரும் சுயாதீனமாக செயல் பட முடியாதவளாக பெண்ணை முடக்கி விடுகின்றது.