– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
மொழிபெயர்ப்பு நாவல்களில் முதன்மை இடத்தில் சிறப்புற்று விளங்குவது மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர் நாவல்களாகும். இவருடைய வெண்முகில் எனும் நாவலில் அரசியல் கூறுகள் உள்ளிட்ட பல கூறுகள் காணப்படுகின்றன. இக்கூறுகளில் முதன்மையிடத்தில் விளங்குவது காந்தியக் கொள்கைகள் என்பதாகும். ஏனெனில், குமரி முதல் இமயம் வரை மகாத்மா காந்தியடிகளைப் பற்றியும், அவருடைய கொள்கைகளைப் பற்றியும் அறியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதனால் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் காந்தியக் கொள்கையினைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான காரணம் தற்காலத்தில் காந்தியத்தை மறந்துபோகின்ற தருணத்தில் மக்கள் இருக்கின்றார்கள். இதனை வலியுறுத்தும் விதமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது
.
காந்தியக் கொள்கை
இந்திய வரலாற்றில் திலகரின் ஆதிக்கத்திற்குப்பின் ஈடு இணையற்ற ஒரே மாபெரும் தலைவராக இருந்தவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார். அவரின் சமயம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றி பலரும் சிறை சென்றனர். அவ்வரலாற்று நிகழ்வுகளைத் தம் படைப்பில் பதிவு செய்தனர் எழுத்தாளர்கள். அவ்வகையில், சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்பினைக் காண்டேகரும் தன் படைப்பினுள் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவ்வகையில் காந்தியக் கொள்கையினைப் பிரதிபலிக்கும் விதமாக இவருடைய வெண்முகில் நாவல் அமைந்துள்ளது.