– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
முன்னுரை:
பண்படுவது பண்பாடாகும். பண்படுதல் என்பது சீர்படுத்துதல்,செம்மைப்படுத்துதல் எனப் பொருள்படும்.
‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்‘1(கலி.பா.133.8)
என்று கலித்தொகை விளம்புகிறது.
பண்பாடு என்பது தனிமனித ஒழுக்கத்தையும், தனிமனிதன் என்ற வட்டம் கடந்து குழு வாழ்க்கையையும் ஒரு சமுதாயத்தின் அல்லது பெரும் பகுதியின் முதன்மைப் பண்பாடாகும். சங்ககால மக்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் செழுமையும் கொண்டவர்கள் ஆவர். சங்க கால மக்களின் செயல்கள் அனைத்தும் இருபெரும் பிரிவுகளாக இருப்பவை. அகம் புறம் என்ற உணர்வு நிலைகள் ஆகும்.
விருந்தோம்பல் பண்பு:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே இல்லறத்தில் தலையாய நெறியாகும். முன்பின் அறியாத புதிய மனிதர்களை வரவேற்று உபசரிப்பதே ‘விருந்தோம்பல்’எனப்படும். நம்முடைய உறவினர்களைப் போற்றி உபசரிப்பது விருந்தோம்பல் அல்ல. விருந்து என்ற சொல்லிற்கு புதுமை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர்.