எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாழ்க்கையில் என் பால்ய காலத்திலிருந்து இன்றுவரை என்னை மிகவும் பாதித்த ,கவர்ந்த, பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். உண்மையில் நான் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அப்பா அப்பொழுதெல்லாம் ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்னும் குறுநாவலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பார். அப்பொழுதிலுருந்தே ஜெயகாந்தனைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அதன்பின் நான் வாசிக்கத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிறைய வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஜெயகாந்தனின் விகடனில் வெளியான முத்திரைச் சிறுகதைகளிலொன்றான ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ தொடக்கம், ‘தினமணிக்கதிர்ர்’ சஞ்சிகையில் வெளியான ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் என அவரது கதைகளை அதிகம் வாசித்திருக்கின்றேன். ‘தினமணிக்கதிர்’ சஞ்சிகையில் ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுப்பபொன்றிலிருந்து சிறுகதைகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருந்தார்கள். ‘ஒரு பிடி சோறு’, ‘ராசா வந்திட்டாரு’, ‘பிணக்கு’, ‘டிரெடில்’ என்று சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது. ‘ரிஷி மூலம்’ குறுநாவலும் , தொடராக கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியானது. ”அக்காலகட்டத்தில்தான் விகடனில் அவரது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய நாவல்கள் தொடராக வெளியாகின. ராணிமுத்து பிரசுரங்களாக அவரது கைவிலங்கு குறுநாவல் ‘காவல் தெய்வம்’ என்னும் பெயரில் வெளியானது. அதனுடன் சேர்ந்து ‘கருணையினால் அல்ல’ குறுநாவலுமிருந்தது. தொடர்ந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது.
இவை தவிர நான் வாசிக்கத்தொடங்குவதற்கு முன்னர் வெளியான ‘யாருக்காக அழுதான்?’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகியவற்றைப் பின்னர் தேடியெடுத்து வாசித்திருக்கின்றேன்.