புத்தாண்டே! நீ வாழ்க! வருக!

புத்தாண்டே வாழ்க! வருக!

இன்னுமோர் ஆண்டு! புத்தாண்டு!
புத்தாண்டே! உனக்கு வயது எப்பொழுதுமே
ஒன்றுதான்.
வயது ஒன்றானதும் மீண்டும்
வந்து பிறக்கின்றாய். ஆனால்
அந்தவோராண்டினுள்தான் நீ
எத்தனை எத்தனை மாற்றங்களை இப்புவியில்
ஏற்றி விடுகின்றாய். உருவாக்கி விடுகின்றாய்.

இன்பமும் , துன்பமும்
இருப்பின் இயற்கையென்பதை
எடுத்துக்காட்டி நிற்கின்றாய்.
உணர்ந்து பின் மீண்டும்
உறுதியுடன் இருப்பினை எதிர்நோக்கத்தானோ
நீ
மீண்டுமொரு பிறப்பினை
மறு வருடத்திலேயே எடுக்கின்றாய்?

இன்று புதியாய்ப்பிறந்தோமென்று நீ
இங்கு வந்து மீண்டும் பிறப்பதற்கு
எடுக்கும் காலமோ ஒராண்டு!
உன் வழியில் நாமும் மீண்டுமிங்கு
உதிப்போம்; உரமுடன்
உலகத்தை உள்வாங்கி எதிர்கொள்வோம்.

உலகைச் சீரழிக்க மாட்டோம்.
உலகைச் சீரமைப்போம் என்றோர்
உறுதி எடுப்போம். அதையும்
உணர்வுபூர்வமாகவே எடுப்போம். இவ்வுலக
உயிரனைத்துமெம் உறவுகளென்றெண்ணி
உண்மை உணர்ந்து இம்மண்ணை
இன்பப்பூக்காடாக்குவோம். இதற்காக
இணைந்து எழுவோம்; உயர்வோம்.

புத்தாண்டே! நீ வாழ்க! வருக! இப்
புவிதனை நீ
புத்துணர்ச்சியால்,.
பேரின்பத்தால்
பொங்க வைப்பாய்.
மகிழ்ச்சிக்கடலால்
மூழ்கடிப்பாய்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 357: கவிதை – தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை. – – அருண்மொழிவர்மன் –

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு ‘தேவதைகளுக்கு வயசாவதில்லை’ என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.


உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். 🙂 உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் 🙂


அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.


புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீரும் ‘பால்ய காலத்து சகி’ நாவலில் தன் தேவதையை மீண்டும் சந்திக்கும் ஒருவன் அடையும் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.

Continue Reading →