ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். அக்கட்டுரையை எழுதியவர் வ.ந.கிரிதரனாகிய நானே.
ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.
இவரது ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யூதச்சிறிவனொருவனை அவனது பெற்றோர் அவனாவது நாசிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கட்டும் என்னும் எண்ணத்துடன் மனிதரொருவனுடன் அனுப்பி வைக்கின்றனர். இவ்விதம் அனுப்பப்பட்ட அச்சிறுவன் யுத்தச்சூழல் நிலவிய காலகட்டத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளெங்கும் தப்பிப் பிழைப்பதற்காக அலைந்து திரிகின்றான். பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களுக்குள்ளாகின்றான். அவற்ற விபரிப்பதே ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ நாவல்.
பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுடன் இந்நாவல் பற்றி உரையாடியபோது, அந்நாவலால் ஈர்க்கப்பட்ட அவர் அந்நாவலைத் தமிழில் ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளியிட விரும்புவதாகக் கூறினார். நாவலிருந்தால் அனுப்பி உதவுமாறும் கூறினார். நானும் அந்நாவலைபெற்று பாலாஜிக்கு அனுப்பினேன். இது பற்றி நண்பர் பாலாஜி என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு: