ilakkiyavaasal@gmail.com
இயற்கைகோடு இயைந்து வாழ்கின்ற நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் அவர்தம் இயற்கைப்புரிதல், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாண நிலை போன்றவற்றிற்கான சிறந்த ஆவணங்களாகும். பஞ்சபூதங்களையும், மரம், கல், ஞாயிறு, நிலவு, பிறை போன்ற பல்வேறு இயற்கைக்கூறுகளையும் வழிபடுகின்ற படகர்கள் காற்றினையும் வணங்குகின்றனர். காற்றினைக் “காயி” என்று அழைக்கும் இவர்கள் காற்று சார்ந்த பல வாழ்வியல் வழக்காறுகளைக் கட்டமைத்து அதனை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
குழந்தைவளர்ப்பு மீது அதீத அக்கறையுடையவர்களாக விளங்குகின்ற இம்மக்களின் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. அதே நிலையில் கருப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் பேணுவதில் இவர்கள் கட்டமைத்துள்ள வழக்காறுகளுள் காற்றினையும் அதனால் உறும் பாதிப்புகளைக் கையாளும் விதமும் குறிப்பிடத்தகுந்ததாகும். காற்றினால் மனித உடலுறும் பாதிப்பையும், அதற்குரிய தற்காப்பு மற்றும் மருத்துவத்தையும் அடியொற்றியதாக இவ் ஆய்வுக் கட்டுரை விளங்குகின்றது.
பஞ்சபூதங்களில் வலிமையின் கூறாக காற்று கருதப்படுவதைப் புறநானூறு சுட்டுகிறது (புறம், பா. 2). உலகம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்குக் காற்று மிகவும் இன்றியமையானது. காற்று மனிதனின் உடலில், சூழலில் ஏற்படுத்தும் விளைவின் அடிப்படையில் படகர்கள் காற்றினைக் “காயி” (காற்று), “தொட்ட காயி” (பெரிய காற்று) என்று இருவகைப்படுத்துகின்றனர்.
தொல்காப்பியத்தின் தொன்மையை அறிய முயல்வதிலிருந்து தொல்காப்பியர் யார் என்ற விடையத்தை தேட இக்கட்டுரையில் முயல்கிறோம். தொன்மை என்றதும் கி.பி ஒன்றா அல்லது கி.மு.இருபத்தொன்றா என்ற ஆய்விற்குள் செல்லவில்லை. மாறாக இலக்கிய அறிவியலில் விளக்கப்பட்டுள்ள மனித வரலாற்று படிநிலை எட்டினுள் தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தில் உருவெடுத்த சிந்தனையாளர் என்பதை அறிய முயல்கிறோம்.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)
வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்டச் சமூகத்தின் முதிர்ச்சியில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கியவர். குரங்கு இனங்களிலிருந்து மனித இனம் உயிரியல் பரிணாமக் கொள்கை அடிப்படையில் எப்படி படிமலர்ந்தது என்பதை அவரது ஆய்வு விளக்குகின்றது. தொல்காப்பியரோ அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்த்துகிறார்.