சுமதி ரூபனின் (கறுப்பி) சிறுகதைகள் ஐந்து!

சுமதி ரூபன்பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63

1. நாகதோஷம்! – – சுமதி ரூபன்

கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு பரந்து அந்த அறைப் பரப்பை மூடிக்கொள்ள சாளரத்தினூடே ஊடுருவிப் புகுந்து கொண்ட  மெல்லிய நீல நிலவொளி அவளின் நிர்வாண உடல்பரப்பில் பட்டுத் தெறித்து விட்டத்தில் ஏற்ற இறக்கங்களை காட்டி நின்றது. அவள் மோகித்திருந்தாள்.. அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள் கலைந்தாள். நாகம் அசைந்தது.. மென் கறுப்புத் தோலைக் களைந்து விட்ட நாகம் தனது நுண்மையான கரும் நாக்கால் அவளின் பாதம் தொடங்கித் தலைவரை மெல்ல நகர்ந்து, முகர்ந்து, புகுந்து, நழுவ சூரியனைத் தொட்டுவந்தவள் போல் உடல்த் தணதணப்பில் அவள் சிணுங்கினாள்.. நாகத்திற்கு கோபம் தலைக்கேறியது.. என்றோ தான் ஏங்க வைக்கப்பட்டு ஏமாந்தது போல் ஆவேசம் வந்தது.. நாகம் வேகம் கொண்டு அவள் உடலை சுற்றி ஆவெசமாய் இறுக்க எலும்புகள் மெல்ல நொறுங்கத் தொடங்கின.. அவள் உச்சத்தின் வேதனையில் வாய்விட்டுக் கதறினாள்.. நாகத்தின் பார்வையில் குரோதம் தெரிந்தது.. மூடிக்கிடந்த அவள் கண்களை தனது நாக்கால் எச்சில் படுத்தி அவள் கண்விழிகளுக்குள் தனது பார்வையைச் செலுத்தியது.. அவள் வார்த்தைகளற்று வதைபட்டாள்.. அவள் வளைவுகளை அழுத்தி தனக்கான மோகத்தில் திளைத்து எழுந்தது நாகம்.. அவள் மூச்சுக்காற்று மெல்ல மெல்ல அடங்க களைப்புற்ற நாகம் விலகி அவள் கூந்தலுக்குள் நுழைந்து புரண்டு தனது தோலுக்குள் புகுந்து நகர்ந்து கொண்டது.. வரண்டு போய் அசைவின்றிக் கிடந்தாள் அவள். கண் விழித்தாள்.. தெளிவற்று குத்தி நின்றது பார்வை.. பல வருட கேள்விகளுக்கு விடைதேடிக்களைத்து இன்று பதில் கிடைப்பதாய் நம்பி மீண்டும் கலைந்து போனாள். மனதுக்குள் குரோதம் வளர்ந்தது.. ஆண்மையின் மிதப்பில் நாகம் அசைந்தது. விம்மிப்புடைந்து நிற்கும் தனது மார்புகளிளைத் தடவிக்கொடுத்து அதிசயித்தாள்.

நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக்குள் வாங்கிப் பிரதிபலிக்க, இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணாடிக்குள் அடங்கிப்போய், இடுப்பில் பிதுங்கும் தசை.. பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்.. உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்;கள்.. கண்கள் உடலில் அர்த்தமின்றி மேய்ந்து வலம்வர குளிர்காற்று ஊடுருவி தலைமயிரைக் கலைத்துக் கன்னத்தில் போட்டது..

Continue Reading →

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

வல்லமை.காம் இணைய இதழில் முனைவர் வே.மணிகண்டன் எழுதிய இணைய இதழ்கள் பற்றிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது. – ஆசிரியர் –


வல்லமை.காம் (நவம்பர் 10, 20170)

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

திண்ணை இதழ் அறிமுகம்

ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

Continue Reading →

மொழிபெயர்ப்புச் சிறுகதை: ஜோ பாசின் அன்னைக்கு ஒரு திறந்த கடிதம்.

டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் ஆகஸ்ட் 2003 இதழ் 44 –

நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள்  என்று எணக்குத் தெரியாது. நாம் சந்திக்க மாட்டோம். உங்கள் வயது எனக்குத் தெரியாது. என் வயதினராக இருப்பீர்களென நினைக்கிறேன். எனக்கு நாற்பத்தோரு வயதாகிறது. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகளிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள். என் மகளுக்கு பதினைந்து வயதாகிறது.என் மகனுக்கு பன்னிரண்டு வயசாகிறது. உங்களுக்கும் பன்னிரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறான்.

என் மகன் கானாவில் பிறந்தான். அப்போது மருத்துவர் அருகிலில்லை. நான் நலமாக இருந்தாலும் டாக்டருக்கு அதிக வேலைகள் இருந்ததாலும், ஒரு மருத்துவச்சி தான் என்னை கவனித்துக் கொண்டாள். அவள் ஒரு கானிய குடும்பத் தலைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். எனவே எந்த மருத்துவருக்கும் அவருக்குத் தெரிந்த அளவு தெரிந்திருக்க நியாயமில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் எனக்கு உறுதியளித்தார். “இது ஒரு ண் குழந்தையாகத் தானிருக்கும். ஒரு ஆணால் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியும்”. நான் வலியால் துடித்த போது அந்த பெண்மணி நான் பிடித்துக் கொள்ள தனது கைகளை நீட்டினாள். அந்தக் கைகள் மட்டுமே வாழ்வின் கடைசி நம்பிக்கைச் சின்னங்களாக நினைத்து நான் பற்றிக் கொண்டேன். “இதோ விரைவில் முடிந்து விடும். நான் உன்னிடம் பொய் செல்வேனா. இதோ பார். எனக்குத் தெரியும். நானும் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்,” என்று கூறினார்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: டானியல் ஜீவாவின் மூன்று சிறுகதைகள்

- டானியல் ஜீவா -பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜூலை 2002 இதழ் 31

1 தவிப்பு – டானியல் ஜீவா –

என்னெண்டு தெரியல நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற  மசிலி இறிகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ…  கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது.  குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்காரி கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் ரியாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு…. உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊரில இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்…சீ… அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இஇருக்குது என்று என் மனம் சொல்லியது.

தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே தூக்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன்.  ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.

”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்¡£ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.

Continue Reading →

சிறுகதை: புலம்பெயர்ந்த காகம்

நாகரத்தினம் கிருஷ்ணா‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38

கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து ஸ்விட்சைத் தட்டினார். வெளிச்சம் நிரம்பி வழிந்தது. ஜன்னல் கண்ணாடிகளுக்கு வெளியே இருந்த பிவிசி திரைகளை மின்சாரப் பொத்தானை அழுத்தி சுருட்டினார். உள்ளே இருந்த மெல்லிய பிரெஞ்சுத் திரைச் சீலைகளும் நீக்கபட்டன. வெளியே ஆரவாரமற்ற ஐரோப்பிய வைகறை. தலையில் ஒளியைச் சுற்றிய வண்ணம் மெல்லிய உறுமலோடு குப்பைக்கூடைகளை ஒரு பகாசூரனின் பசி ஆர்வத்தோடு வயிற்றில் இட்டுக் கொள்ளும் குப்பையள்ளும் லாரி. சிறிது நேரம் அந்தக் காட்சியில் லயிப்பற்றுக் கவனம் செலுத்த, மறுபடியும் பின்பக்கமிருந்து கா கா என்ற அந்தக் குரல். இந்தியாவில் மட்டுமே அவர் கேட்டிருக்கின்ற ஓசை. குரலா? ஓசையா? எப்படி இனம் பிரிப்பது என்ற கேள்வி தேவையில்லாமல் எழுந்தது. சற்று கவனமாகக் கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காகத்தின் குரல் தான். இங்கே எப்படி?

இந்தியாவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குரலின் அல்லது ஓசையின் சுகத்திற்காகவே வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் புழக்கடைப் பக்கம் சென்று படுப்பது வழக்கம். அதிகாலையில் எங்கேயோ ஒரு சேவல் “கொக்கரிக்கோ ” எனத் தொண்டை கமறலோடு ஆரம்பித்துவைக்க அது ஊரெல்லாம் எதிரொலித்துவிட்டு இவரது சகோதரர் வீட்டு கோழிக்கூண்டில் வந்து முடியும். இந்த நிகழ்வுக்காகவே காத்திருந்தது போல, ஒரு காகம் கா.. கா என ஆரம்பித்துக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு கா.. கா என்ற கச்சேரி. ” இந்தப் பாழாப்போன காக்கைகள், தூக்கத்தைக் கெடுக்குதே! உள்ளே வந்து படுக்கக் கூடாதா? என்று அங்கலாய்க்கும் அவரது அம்மாவிற்குத் தெரியுமா? இந்தியாவிற்கு அவரை இழுத்துவருகின்ற விஷயங்களில் இதுபோன்ற ஓசைகளும் உள்ளடக்கம் என்று.

இந்தியாவில் இருக்கும் வரை, அமாவாசை கிருத்திகை எனக் கடவுள்களுக்கோ, முன்னோர்களுக்கோ வீட்டில் படைக்கும் போதெல்லாம் காக்கைக்குச் சாதம் வைப்பது இவராகத்தான் இருக்கும். பூவரச இலையைக் கிள்ளி ஒரு கவளப் படையலை ஏந்தி பின்புறமிருக்கும் கிணற்றடிச் சுவரில் கையிலிருக்கும் குவளைநீரைத் தெளித்து, சோற்றுக் கவளத்தை வைத்துவிட்டுக் காகத்தைத் தேடி அது ஒன்று பத்தாகும் ரசவாதத்தை மெய்மறந்து கண்களை விரியவிட்டிருக்கிறார். கடைசியாக அவரது அப்பா இறந்தபோது,காரியப் பிண்டத்தைக் குளத்தங்கரையில் வைத்துவிட்டு துக்கத்தை மறந்து, காகங்களின் ஆள் சேர்ப்பில் சந்தோஷம் கண்டது ஞாபகத்திற்கு வந்து போனது..

Continue Reading →

சிறுகதை: போர்க்களம்

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் செப்டெம்பர் 2001 இதழ் 21  –

-ஒன்று-

பாவண்ணன்பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல் வானில் மோதியது. ஒருபுறம் மார்பு பிளந்த மகாபலியின் அலறல். இன்னொருபுறம் நமுசியும் சம்பரனும் இதயத்தில் தைத்த வேல்களைப் பிடுங்கும்போது எழுப்பிய மரணக் கூச்சல். மற்றொரு புறத்தில் வேரற்ற மரம் போல விழுந்த அயோமுகனின் சத்தம். அச்சத்தத்தில் நெஞ்சம் துடித்தது. தன்னைச் சுற்றிலும் அசுரர்கள் அபயக் குரல் எழுப்பியபடி ஓடுவதைக் கண்டன ராகுவின் கண்கள். உடல் இரண்டு துண்டுகளாக அறுபட்ட நிலையில் முன்னால் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்த காட்சிகளைத் துயரத்துடன் நோக்கினான் அவன். கடலின் செந்நிறம் ஏறிக் கொண்டே இருந்தது. ரத்தம் கலந்த கடற்பரப்பில் மரணதேவதையின் முகம் தெரிந்தது. ஒரு பெரிய மிருகத்தின் முகம் போல இருந்தது அவள் முகம். அந்த வெறி. அந்தச் சிவப்பு. அவள் கோரைப் பற்கள். உயிரற்ற உடல்களை அள்ளி எடுக்க நீண்டன அவள் கைகள். அக்கை கடலையே துழாவிக் கரையைத் தொட்டது. யாரோ தாக்கியது போல உடல் அதிர்ந்தது. “ஐயோ” என்றான்.

விழிப்பு வந்துவிட்டது. பீதியில் இதயம் துடிக்கச் சுற்றியும் இருந்த கூடாரங்களைப் பார்த்தான் ராகு. உண்ணாநோன்பினால் சோர்ந்திருந்தாலும் மோகினியின் அங்க அழகுகளைச் சுவையோடு பேசிக் கொண்டிருக்கும் சக வீரர்களின் குரல்கள் கேட்டன. அனைவரும் கொல்லப்படுவதாக எப்படி நினைத்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்தக் கனவின் காட்சி மீண்டும் விரிந்தது. மெல்ல எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் ஏறிய வானம் கண்களைக் கூசவைத்தது. அருகில் இரைச்சலிடும் அலைகளையே வெகுநேரம் பார்த்தான். அவனுக்குத் தன் மனத்தில் கவிந்திருக்கும் குழப்பம் பற்றிக் கவலை உண்டானது. “அபசகுனம்” என்று முணுமுணுத்துக் கொண்டான். எழுந்து கைகளை வானை நோக்கி உதறினான். அவசரமாகப் பணியாள் ஓடிவந்து அருகில் நின்றான். “துணைக்கு வரவேண்டுமா அரசே?” என்றான். ராகுவின் பார்வை அவன் தோள்களில் பட்டு மீண்டது. அவன் காட்டும் பணிவு நடிப்பா உண்மையா புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றான். புன்னகையோடு தலையசைத்தபடி தொடர்ந்து தனியாக நடக்கத் தொடங்கினான்.

Continue Reading →

பிரெஞ்சு சிறுகதை: எல்ஸாவின் தோட்டம் –

நாகரத்தினம் கிருஷ்ணா‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் மே 2003 இதழ் 4

-1-

தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள். மண்ணில் விளையாடியதால் அழுக்கடைந்த கால்கள். எல்ஸாவின் தோட்டம் உயரமான மரங்களும், எண்ணிக்கையற்ற பூவகைகளும் நிறைந்த தோட்டம். எல்ஸாவின் சிறியக் கண்களுக்குள் அடங்காத மிகப்பெரியத் தோட்டம். ஆனால் அவள் கற்பனையில் விரிந்தக் கதைகளுக்கும், துடுக்கான விளையாட்டிற்கும், அவ்விளையாட்டுக்கெனவே கற்பனையில் உதிக்கின்ற அவளது தோழர்களுக்கும் ஏற்றத் தோட்டம்.

மரங்கள் தோறும் தாவிச் செல்லும் சித்திரக் குள்ளன். அழகான மலர்களிலிருந்து சுகந்தத்தை மட்டுமே சேகரிக்கின்ற குட்டி தேவதைகள். வழக்கம்போல வசிய மருந்துகக்காக கள்ளிச் செடிகளையும், அழுகியப் பழங்களையும் தேடுகின்ற சூனியக்காரிகள் என அவளது கற்பனைக் கேற்றவாறு தோட்டத்தின் பங்களிப்பு மாறும். மணல் நிரப்பப்பட்டத் தொட்டியில், அவள் கட்டுகின்ற மணற்கோட்டைகளில் சூரியனின் கதிர்களும், மேகத்தின் நிழல்களும் வாசம் செய்யும். பூமியில் காதினை வைத்து மண்ணில் வாழும் புழுக்களும் வண்டுகளும் இடும் இரைச்சலைக் கேட்டு, அவைகளை ஆச்சரியப் படுத்துவாள்.  சிறிது நேரம் அவள் ஆடுகின்ற ஊஞ்சலின் மூலம் உயரே பறக்கின்ற ‘மேசான்ழ்’ குருவியை பிடித்திட முயல்வாள். பின்னர் இறங்கி  ‘ராஸ்பெரி’ பழங்களைப் பறித்து ‘மாக்பை’ குருவியோடு பங்குபோட்டுக் கொள்வாள். ‘மாக்பை’ குருவி அமர்ந்திருக்கும் சுவர்தான் வீதியிலிருந்தும், வெளி மனிதர்களிடமிருந்தும் தோட்டத்தைப் பாதுகாக்கிறது. தோட்டத்து அமைதியை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது.

Continue Reading →