– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர் –
பதிவுகள் மார்கழி 2005 இதழ் 72
1. சு.ரா – ஒரு சாமன்யனின் குறிப்புகள்! – நேசகுமார் –
சுந்தர ராமசாமி இறந்ததை எனக்கு முதலில் அறிவித்தது அரவிந்தன் நீலகண்டன் தான். நாகர்கோவிலிலிருந்து அழைத்து, “சுரா இறந்துவிட்டாராம்” என்றார். நான் அவரது குரலில் வேறேதேனும் தொணி தென்படுகிறதா எனக் கவனிப்பதில் மும்முரமானேன். எதிர் முனையில் தென்பட்ட அமைதி, அவரும் என் மனவோட்டத்தை கணிக்க முற்படுகின்றார் என்பதைக் காட்டிற்று. அதன் பின்னரே ஏனைய நண்பர்களின் தொலைபேசிகள், சன் டிவி செய்தியில் அவரது கண்ணாடிக்குள்ளிருக்கும் உடல், மிகச் சிலரே அவ்வுடலைச் சுற்றியிருக்கும் காட்சி போன்றவற்றைக் காணவும், மத-சாதி அடையாளங்களும் சம்பிரதாயங்களுமின்றி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதை சன் டிவி செய்தி வழியாக கேட்டறியவும் முடிந்தது.
சுந்தர ராமசாமி பற்றி எப்போது அறிந்தேன்? காலச்சுழலில் பின்னோக்கிப் பயணித்தால் வைதேகிக்கும் ஷோபனாவுக்கும் இடையே இருந்த பகைமைதான் சு.ராவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது என்பது நினைவிற்கு வருகிறது. வைதேகி தனது தாழ்வுணர்ச்சிகளை மீறி வெளிவருவதற்கு பயன்படுத்திய பல ஆயுதங்களுள் சுந்தர ராமசாமியும் ஒன்று – அவரது “.ஜே சில குறிப்புகளையும்”, புளியமரத்தின் கதையையும் அடிக்கடி கையில் வைத்திருப்பார் – என் போன்ற ஞானசூன்யங்களுக்கும் அவற்றை அறிமுகப் படுத்தி வைத்தார். வைதேகி, தொண்டாம்புதூர்க்காரர். ஷோபனாவோ, திருச்சிக்காரர். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நவநாகரிக நங்கைக்கான குணாதிசயங்கள் மற்றும் அழகென நாங்கள் கருதிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் – பாலகுமாரன் ரசிகை.