நண்பர் கணன் ஸ்வாமியுடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் இன்று நடைபெற்ற தேடகம் அமைப்பினரின் முப்பதாண்டு விழாவின்போது கிடைத்தது. அப்பொழுது அவர் தமிழகத்துப் புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத்தமிழ் அகதி முகாமில் சுமார் பதினைந்து வருடங்கள் தான் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் அவர் நண்பர்களுடன் இணைந்து ‘பரதேசியின் வலித்தொகை’ என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் 2008 வரை ‘மனுதர்’ எனுமொரு வலைப்பதிவினையும் நடாத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தேன். ஒரு பதிவு மட்டுமேயிருந்தது. ஏனையவை நீக்கப்பட்டு விட்டன போலும்.
கணன் ஸ்வாமி தன் புதுக்கோட்டை அகதிகள் முகாம் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நல்லதோர் ஆவணமாகவிருக்கும். கணன் ஸ்வாமி செய்வாரா? செய்வார் என்று எதிர்பார்ப்போம்.
அவரது ‘மனுதர்‘ வலைப்பதிவிலுள்ள ‘பரதேசியின் வலித்தொகை‘ 11 கவிதைகளின் தொகுப்பிது. அப்பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பரதேசியின் வலித்தொகை தொகுப்புக்கு நல்லதொரு பெயர். அகதிகளாகப் பரதேசம் அலைந்து திரிபவர்களின் வலியினை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகை (தொகுப்பு).