உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள்
முன்னுரை
பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒருவகையில் வாழ்வியல் முறைகளைக் குறிப்பதாக அமையும். மனிதர்களது நடத்தைகள். அவர்களது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பாக இது காணப்படுகின்றது. அவ்வாறே இலக்கியங்கள் என்பனவும் மனித சமுதாயத்தைப் பண்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்பு பெறுகின்ற தெனலாம். இவ்விலக்கியம் பண்பாட்டு பதிவுகளை இனங்காண்பதற்கு ஆதாரமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பாட்டு
தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற சங்க காலத்துத் தமிழ் நூல்களாகக் கருப்பெறுவன பாட்டும் தொகையுமாகும். இவ்விருவகை நூல்களும், அளவாலும் திறத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வகைப்படுத்தப்பெற்றன என்பர். இவ்விருவகை நூல்களும் தமிழ்மக்களின், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய, சமுதாய நம்பிக்கைகள், அகம் புறம் ஆகிய வாழ்க்கை நெறிகள் ஆகிய எல்லாவற்றையும் பொதிந்து வைத்திருக்கின்ற பேழைகளாக விளங்குவன.