உதிர்தலும் ஓர் அழகுதான்.
அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு’ என்ற பாடல்வரிகளை அவளுக்கு நினைவுபடுத்தியது. இலைகளை உதிர்க்கத் தயாராகியிருந்த அந்த மரங்களின் கிளைகளின் இடுக்குகளுக்கிடையே ஊடறுத்துச் சென்ற சூரியஒளிக் கீற்றுக்கள், ஓவியன் ஒருவன் கவனமாகப் பார்த்துப்பார்த்து வர்ணமிட்டதுபோலத் தோற்றமளித்த அந்த இலைகளுக்கு மேலும் அழகுசேர்த்தன. காற்றில் சலசலத்த இலைகளில் சில காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்ணாந்து பார்த்த அவளின் முகத்தை மெல்லத் தொட்டுப் போயின. ஒரு கணம், அவளின் மனம் ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டது.
மரங்களின் கீழே குவிந்திருந்த இலைகளின்மேல் மெதுவாகக் காலடிவைத்து, அவை சரசரக்க அவள் நடந்தாள். விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிக்குவிப்பதும் பின் அவற்றின் மேலேறிக் குதிப்பதும், விதம் விதமான வடிவங்களில் உள்ள இலைகளைச் சேகரிப்பதுமாக அம்மாவுடன் அந்தக் காலத்தில் அவள் விளையாடிய விளையாட்டுக்கள் அவளின் நினைவுக்கு வந்தன. அப்படியே சின்னப் பிள்ளையாக, அம்மாவின் ஒரு குட்டித் தேவதையாக, உறவுகளில் எந்தச் சிக்கலுமில்லாத ஒரு சிறுமியாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும், நினைப்பில் அவள் கண்கள் கசிந்தன.
இயற்கை எப்போதுமே அழகானதுதான். பருவகாலத்து மாற்றங்களை ஆவலுடன் வரவேற்பதும், அவற்றுக்குள் அமிழ்ந்து குதூகலிப்பதும், பருவத்துக்கேற்ற வகையில் விளையாடுவதும்கூட எவ்வளவு இனிமையானவையாக இருக்கின்றன. ஆனால், அதே உதிர்தல்கள், விலகல்கள், விரிசல்கள் வாழ்க்கையில் ஏற்படும்போதுமட்டும் அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனசு மிகவும் வலிக்கிறது. ஒவ்வொரு புதுத்தளிரையும், ஒவ்வொரு புதுஅரும்பையும் பார்க்கும்போது உருவாகும் பரவசமும் சிலிர்ப்பும், உறவுகள் உருவாகும்போது இன்னும் அதிகமாகவே வந்து மனதை நிறைத்துவிடுகிறது, ஆனால், அதே உறவுகள் விலகும்போது மட்டும் அதே லயிப்புடன் பார்க்கமுடிவதில்லை என்ற ஒப்பீடு அவளின் கண்களை மீளவும் நனைத்தது.
மகிழ்ச்சிதரும் ஆரவாரிப்பும், இழப்புத்தரும் வேதனையுமின்றி, Giver என்ற நாவலில் வரும் மனிதர்களைப்போல உணர்ச்சி என்றே ஒன்றில்லாமல் வெறுமன கடமையை மட்டும் செய்துகொண்டு வாழமுடிந்தால், இந்த உலகத்தில் பல பிரச்சினைகள் குறைந்துவிடும் … பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது.
“அன்பு செய்யுங்கள், அன்பே தெய்வம், அன்பு செய்வது பலவீனமல்ல, அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள் … எல்லாமே கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா எதிர்பாப்பில்லாமல் அன்புவைக்கிறது எண்டது … ம், ஐயோ என்னாலை முடியாதப்பா. உதவிசெய்யிறது வேறை, அன்பு வைக்கிறதெண்டது வேறை … சரி, அன்பு எண்டது சுயநலமும் கலந்ததுதான், இருக்கட்டுமே, எனக்கெண்டு நேரமொதுக்கேலாத, என்ரை உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத அன்பு ஒண்டும் எனக்கு வேண்டாம்,” வாய் விட்டே அவள் சொல்லிக்கொண்டாள்.
“குளிர்வர முதல் மரங்களெல்லாம் தங்கடை இலையளை உதிர்க்கிறதும் சுயநலத்திலைதானே. இலையளை வைச்சிருந்தா தாங்க பிழைக்கேலாது எண்டுதானே அதுகளை உதிர்க்குதுகள். பின்னையென்ன, சீ பாவம் அந்த இலையள் குளிரிலை கருகிப் போடுமெண்டு நினைச்சே அதுகளை உதிர்க்குதுகள் … உறவுகளும் ஒரு வகையான addictionதான் எண்டு பிரேம் அண்டைக்குச் சொல்லேக்கே அவனும் இப்பிடித்தான் நினைச்சிருப்பான். என்னோடை தொடர்புகளை அவன் குறைச்சது அவனையும் அவன் முக்கியமெண்டு நினைக்கிற உறவையும் காப்பாத்துற ஒரு முயற்சியாத்தானிருக்கும்…” அவளின் உள்மனம் அவளுடன் பேசியது.