– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர் –
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
1. “டோபா டேக் சிங்’ – உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ| ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.