இலக்கியம் என்பது மனித வாழ்க்கைக்குரிய இலக்கை இயம்புவது. மனித குலத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நல்லவர்களையும் அவர்களுக்கு இடையூறு செய்யும் தீயவர்களையும் அன்பு, அறம் போன்ற நல்லுணர்வுகளையும் அவற்றைப் பகைக்கின்ற வன்பு, மறம் போன்ற அல்லுணர்வுகளையும் இலக்கியங்கள் வடிக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதால் இலக்கியங்கள் அனைவருக்கும் பொதுவாக விளங்குகின்றன.
இலக்கியம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த கோடான கோடி மக்களுடைய எண்ணங்களின் பேழையாகும். காலந்தோறும் அப்பேழை பெருகுகின்றது. ஏனைய கலைகளிலும் இலக்கியம் வாழ்வொடு பொருந்திய கலையாதலின் இலக்கியம் இயற்றிய புலவன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித சமுதாயம் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் எத்தகைய பயன் கிடைக்கும் என்பது பற்றிய எதிர்கால அணுகுமுறையில் இலக்கியம் படைக்கின்றான். அவ்வாறான இலக்கியங்களுள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.
தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர், உலகத்தோர்க்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் முதன்மையராய் வைத்து எண்ணப்படுகிறார். உலகம் போற்றும் திருக்குறளில் அவர் வகுத்துள்ள ஒழுக்கமுறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுவதற்குரியதாய், பொதுநோக்கப் பார்வையோடு இயற்றப்பட்டுள்ளது. ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டியவர். தாம் பெற்ற இன்பத்தை மற்றையோரும் பெறவேண்டும் என்னும் உயரிய எண்ணத்தராய், அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்கமுறையை திருக்குறள் மூலமாக உணர்த்தியுள்ளார்.