[எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவரது நாவல்களிலேயே பலத்த வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பிய நாவல். அந்நாவல் பற்றி அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளை உள்ளடக்கிய இணையத்தளம் விஷ்ணுபுரம்.காம். அத்தளத்தினை இம்முறை பதிவுகள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இத்தளத்திலிருந்து ஜடாயு விஷ்ணுபுரம் பற்றி எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்-]
விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை
– ஜடாயு
“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”. விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம். நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.
Continue Reading →