இலக்கிய உலகில் ஒரு பொக்கிசம் கே. எஸ். சிவகுமாரன்

[ ‘கொடகே’ வாழ்நாள் சாதனையாளர் (2012)ற்கான கௌரவ சாஹித்திய விருதினைப் பெறுகிறார் கே. எஸ் சிவகுமாரன் அவர்கள்  எழுத்தாளர் முருகபூபதியால் எழுதப்பட்டுத் தமிழ்முரசு(ஆஸ்திரேலியா) இணையத்தளத்தில் வெளியான கட்டுரை  இதனையொட்டி  இங்கு மீள்பிரசுரமாகிறது. – பதிவுகள்]

K.S.Sivakumaranஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன். இதுவரையில் தமிழில் 22 நூல்களையும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.  தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள். சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதை எழுத்தாளருமாவார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார். இருமை, சிவகுமாரன் கதைகள்  ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். விரைவில் பவளவிழாக்காணவுள்ள கே.எஸ்.எஸ்., பேராதனைப்பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர். விமர்சகர்கள் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திரனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.

Continue Reading →