[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
பூம்புகார், சங்க காலத்தின் பெரும்புகழ்ப் போற்றலுக்கு உரிய சோழர்களின் நாடறிந்த தலைநகராயும் துறைமுக நகராயும் திகழ்ந்து காவேரி ஆறு வங்கக் கடலுடன் கூடும் இடத்தில் (இற்றை நாகப்பட்டின மாவட்டத்தில்) சூழமைவு கொண்டுள்ளது. இந்நகர் காவிரிக்கு கரையின் இரு புறத்தும் நான்கு காவதம் வரையான நீளத்திற்கு தன் சிறகுகளைப் பரப்பி இருந்தது என்று நம்பப்படுகின்றது. இந்நகருக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள்குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது.