சங்க காலத்துச் செய்யுள்கள் எப்பொழுதுமே என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை. ஆறுதலாக அவற்றை அவ்வப்போது வாசித்து அனுபவிப்பதில் எனக்குப் பெரு விருப்புண்டு. பொதுவாக அவை என்னைக் கவர்வதன் காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அவற்றில் காணப்படும் வளம் நிறைந்த சொற்செறிவு, கூர்ந்த நோக்கு மிக்க இயற்கை மீதான அவதானிப்பு, படைப்பாற்றல், கற்பனைச் சிறப்பு, மற்றும் அன்றைய கால கட்டச் சமுதாய அமைப்பு பற்றிய தகவல்கள். அண்மையில் வாசித்த சங்ககாலச் செய்யுளொன்று வாசித்தபொழுது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மீதான யோசிப்பின் பதிவுகளை சிறிது பகிர்ந்துகொள்ள விழைந்ததின் விளைவே இச்சிந்தனைக்குறிப்புகள். இந்தச் செய்யுளினை இயற்றியிருப்பவர் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார். திணை: நெய்தல். தன் காதலுக்குரிய தலைவனை நீண்ட காலமாகக் காணாத தலைவி, அவனுடன் திரிந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்து வருந்துகிறாள். அவனைக் காணாததால் ஏற்பட்ட துயர் அவளை வருத்துகிறது. தன் துயரை அவள் தன் காதலனுக்குத் தெரியப்படுத்துவதற்காக அவள் தெரிவு செய்த உயிரினம் ஆச்சரியத்தை விளைவிக்கிறது. நளன் தமயந்திக்கு அன்னத்தைத் தூது விட்டதை நாம் படித்திருக்கின்றோம். வெண்முகிலைத் தூதுவிட்ட தலைவிமாரைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் யாராவது நண்டினைத் தூது விட்டிருக்கின்றார்களா? அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்தச் செய்யுளில் வரும் தலைவி அதனைத்தான் செய்திருக்கின்றாள். ஆம், நண்டினைத் தூது விடுகின்றாள்.