தொடர்நாவல்: மனக்கண் (22)

22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிபத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும், சிவநேசருக்கு வந்த ஆத்திரத்தை அளவிட்டுச் சொல முடியாது. தன் வாழ்நாளிலே, எதிலுமே தோல்வி பெறாத அவர் இந்த விஷயத்தில் இப்பெண்ணிடம் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டி வந்ததே, தன் மகனைத் தன் முன்னாலேயே குருட்டுப் பிள்ளை என்று கூறினாளே இக்குமரி – அவளை விட்டு வைப்பதா என்ற அளவுக்கு அவரது கோபம் ஆவேசங் கொண்ட கடுஞ் சினமாகக் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. “வருவது வரட்டும். பலாத்காரமாக அவளைத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்.” என்ற எல்லைக்குக் கூட அவரது எண்ணங்கள் சென்றுவிட்டன. உண்மைதான். அவர் நினைத்தால் அதுவும் அவரால் செய்ய முடியாத ஒன்றல்ல. கொழும்பு நகரில் அப்பிரதேசத்தில்தான் இலங்கையில் மகா பயங்கரமான காடையர்களும் அகில இலங்கை ரெளடித் தலைவர்களும், கஞ்சா வியாபாரிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், சாராயக்குதச் சொந்தக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் சிவநேசர் என்றால் எப்போதுமே அளவுக்கு மீறிய மதிப்பு. இதற்குக் காரணம் அவர்களில் முக்கியமான ஒரு சிலருக்கு மிக எக்கச்சக்கமான நேரங்களில் சிவநேசர் பல உதவிகளைச் செய்திருந்ததேயாகும். அவர்களைப் பார்த்துச் சிவநேசர் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும். அவர்கள் உடனே நாட்டையே அசைத்துவிடுவார்கள். அத்தகைய செல்வாக்கு அவருக்கு அவர்களிடையே இருந்து வந்தது. மேலும் இத்தகைய கோஷ்டிகளைக் கட்டியாள்வதற்கும், இது போன்ற வேலைகளைச் செய்து முடிப்பதற்கும் வேண்டிய பணத்தைப் பற்றிய கவலையும், சிவநேசருக்கு இல்லை. இன்னும் என்றுமே பணத்தைத் தண்ணீர் போல் அள்ளி வீசிச் செலவிடுவதற்கும் அவர் பின்னிற்பவரல்லர். எனவே, பலாத்காரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் காரியங்களைச் சாதிப்பது அவருக்கு இலகுவான காரியமே.

Continue Reading →

‘வாழும் வலிகள்’

ஆசி கந்தராஜாஹறூத்; என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். ‘மிக நல்ல செய்தி சேர்…, கேள்விப்பட்டீர்களா…?’ என்றான் பரபரப்புடன். அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல்மூச்சுவாங்க, இணையத்தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது ‘ஐபாட்’ அலைபேசியிலுள்ள ‘இணைய’ செய்தியையும் காண்பித்தான். ‘இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம்  அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது…’ என அந்தச் செய்தி தொடர்ந்தது.

Continue Reading →

இயமராசன் தமிழருக்கு அளித்த வரம்

 நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -மனித மூளை என்றும் தீவிரமாக யோசித்துப் பழையன தவிர்த்துப் புதியன காணும் படலத்தில் ஓடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அதிலும் தமிழர் தரம் ஒரு படி மேலேன்று கூறுவர். இந்த வகையில் ஒரு முக்கிய தீர்மானம் எடுப்பதற்காக புத்திசீவிகளான தமிழர் ஒன்று கூடி, அவைத் தலைவராக ஒருவரை நியமித்து, அவர் அத்தீர்மானத்தைச் சபையோர்முன் பின்வருமாறு சமர்பித்தார். “அன்பர்களே! தமிழர்களாகிய எங்கள் வாழ்வியலில் இன்றெல்லாம் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. அதனால் நாம் நினைத்தவாறு ஒன்றும் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. நாம் போடும் திட்டமெல்லாம் நிறைவாக்கமுன் எம் இறப்பு முந்திவந்து யாவையும் குலைத்து விடுகின்றது. எங்கள் தேட்டம் எல்லாவற்றையும் சீராக ஒழுங்கு செய்வதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எங்கள் பிள்ளைகள், மனைவியர் ஆகியவர்களுடன் நீடூழி வாழலாம் என்பது தவிடு பொடியாகி அவர்களையும் நடுத் தெருவில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பிள்ளைகளுக்கும் திருமணம் நடாத்தாது தவிக்க விட்டுச் செல்கின்றோம். நாம் வட்டிக்குக் கொடுத்த பணமும் கைநழுவிப் போகின்றது. இவ்வண்ணம் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பலன் ஏதும் கிடையாது. இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் எங்கள் இறப்பு நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியன எங்களுக்கு முன்கூட்டியே தெரியவேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயமராசனுக்கு மனுக்களை அனுப்பவேண்டும். இதற்குரிய உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். வணக்கம.;”  என்று கூறி அமர்ந்து விட்டார்.

Continue Reading →