22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள்
பத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும், சிவநேசருக்கு வந்த ஆத்திரத்தை அளவிட்டுச் சொல முடியாது. தன் வாழ்நாளிலே, எதிலுமே தோல்வி பெறாத அவர் இந்த விஷயத்தில் இப்பெண்ணிடம் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டி வந்ததே, தன் மகனைத் தன் முன்னாலேயே குருட்டுப் பிள்ளை என்று கூறினாளே இக்குமரி – அவளை விட்டு வைப்பதா என்ற அளவுக்கு அவரது கோபம் ஆவேசங் கொண்ட கடுஞ் சினமாகக் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. “வருவது வரட்டும். பலாத்காரமாக அவளைத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்.” என்ற எல்லைக்குக் கூட அவரது எண்ணங்கள் சென்றுவிட்டன. உண்மைதான். அவர் நினைத்தால் அதுவும் அவரால் செய்ய முடியாத ஒன்றல்ல. கொழும்பு நகரில் அப்பிரதேசத்தில்தான் இலங்கையில் மகா பயங்கரமான காடையர்களும் அகில இலங்கை ரெளடித் தலைவர்களும், கஞ்சா வியாபாரிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், சாராயக்குதச் சொந்தக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் சிவநேசர் என்றால் எப்போதுமே அளவுக்கு மீறிய மதிப்பு. இதற்குக் காரணம் அவர்களில் முக்கியமான ஒரு சிலருக்கு மிக எக்கச்சக்கமான நேரங்களில் சிவநேசர் பல உதவிகளைச் செய்திருந்ததேயாகும். அவர்களைப் பார்த்துச் சிவநேசர் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும். அவர்கள் உடனே நாட்டையே அசைத்துவிடுவார்கள். அத்தகைய செல்வாக்கு அவருக்கு அவர்களிடையே இருந்து வந்தது. மேலும் இத்தகைய கோஷ்டிகளைக் கட்டியாள்வதற்கும், இது போன்ற வேலைகளைச் செய்து முடிப்பதற்கும் வேண்டிய பணத்தைப் பற்றிய கவலையும், சிவநேசருக்கு இல்லை. இன்னும் என்றுமே பணத்தைத் தண்ணீர் போல் அள்ளி வீசிச் செலவிடுவதற்கும் அவர் பின்னிற்பவரல்லர். எனவே, பலாத்காரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் காரியங்களைச் சாதிப்பது அவருக்கு இலகுவான காரியமே.