நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார் பாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலானது 52 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்த கவிஞர் கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள எஸ்.ஏ. முத்தாலிப் அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இதுவரை காலமும் கிண்ணியாவின் இலக்கியப் பயணத்தில் பவனி வராதிருந்த ஒரு கலை வடிவம் கிண்ணியாவின் நாட்டார் கிராமிய பாடல்களாகும். அந்த இடைவெளியை பி.ரி. அஸீஸ் அவர்கள் நிரப்பியிருக்கின்றார். நாட்டார் பாடல்கள் என்றாலே கிராமிய மண் வாசைன கலந்த நடையிலே உணர்வுகள் வெளிப்படுவதாகும். பி.ரி. அஸீஸ் அவர்களின் நாட்டார் பாடல்களில் கிராமிய சொல் வழக்கு அங்காங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது என்கிறார்.