[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இலக்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை ‘பதிவுகள்’ எதிர்பார்க்கின்றது – பதிவுகள் – ]
மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது. – மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக்கூடியதும் இலக்கியம்; – தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்; பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம். – இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம், ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக அக்களத்தை தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக்கொண்டிருக்கின்றன. “அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் – என்கிறார் முனைவர் கா. சிவத்தம்பி. பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.