2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.