[தற்போது ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் ‘வேர் மறந்த தளிர்கள்’ நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. – வ.ந.கி-] இன்று இணையத்தின் வரவு ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகளிலொன்று பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பதுதான். தகவல் பரிமாற்றம் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும், அதனை மிகவும் இலகுவாக்கிவிட்டது. இதனை அனைவரும் புரிந்துகொண்டு மிகவும் ஆரோக்கியமாகச் செயற்படுவது அவசியம். இந்த இணையத்தின் வரவு இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பல நல்ல விடயங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் பலவற்றில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளை, அவர்கள் வெளியிடும் இணைய இதழ்களை, அச்சூடகங்களின் இணையப் பதிப்புகளை .. இவற்றையெல்லாம் இலகுவாகக் கண்டடைய முடிகிறது. வாசிக்க முடிகிறது. அந்த வகையில் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் (இலக்கியமுட்பட) அத்துறைமீதான ஆய்வினை இணையம் மிகவும் இலகுவாக்கி விட்டது. இந்த இணையத்தின் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தை அறிய, வாசிக்க முடிகிறது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அப்படைப்புகளினூடு அறிய முடிகிறது. இவ்விதமாக அண்மைக்காலத்தில் நான் அறிந்துகொண்ட மலேசிய எழுத்தாளரே வே.ம.அருச்சுணன். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் ‘வேர் மறந்த நாவல்’ பற்றியெல்லாம் ‘பதிவுகள்’ இணைய இதழ்மூலம் அறிந்துகொண்டேன். அந்த நாவல் நூலாகவும் வெளிவரவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த நாவலைப் படித்தபொழுது எழுந்த சில என் உணர்வுகளின் வெளிப்பாடே இக்கட்டுரை.