தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். எந்தவொரு விடயத்தையும் மிகவும் சுவையாக, நெஞ்சில் உறைக்கும் வகையில் எழுதுவதில் வல்லவரிவர். மிகவும் சாதாரணவொரு விடயத்தைக்கூட மிகவும் சுவையானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக தனது எழுத்தாற்றல் மூலம் மாற்றிவிடுவதில் அசகாய சூரரிவர். இவரது அபுனைவுகளை வாசிக்கும்போது எனக்கு தோன்றும் முதல் எண்ணம் அவை உண்மையிலேயே அபுனைவுகளா? அல்லது புனைவுகளா? ஏனென்றால் அவரது ஒவ்வொரு அனுபவமும் மிகவும் சுவையாக, புனைகதைக்குரிய திருப்பங்கள், சம்பவங்களுடன் இருப்பதுதான் அந்த எண்ணம் தோன்றக் காரணம். பொதுவாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவற்றில் சில வேண்டுமானால் புனைகதைக்குரிய சம்பவங்கள், திருப்பங்களுடன் இருக்கும். ஆனால் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவ்விதமிருப்பதில்லை. ஆனால், அ.மு.வின் அபுனைவுகளென்று எண்ணிக்கொண்டு வாசிக்கும் பெரும்பாலான படைப்புகள் அற்புதமான புனைவுகள போலிருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.
ஞாயிறு தினக்குரல் வடலி வெளியீட்டின் ஆதரவுடன் மாபெரும் சிறுகதைப் போட்டி ஒன்றை இளம் எழுத்தாளர்களுக்காக நடத்துகின்றது. உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்கள் இதில் கலந்துகொள்ளமுடியும். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த சிறுகதைப் போட்டியில் 65,000 ரூபா மொத்தப் பரிசாக வழங்கப்படுகின்றது. எல்லாமாக 13 பேருக்கு பரிசில்களைப் பெறுவதற்கான வாய்பு உள்ளது. அத்துடன் வெற்றிபெறும் சிறுகதைகளை நூலாக வெளியிடுவதற்கும் வடலி வெளியீட்டு நிறுவனம் முன்வந்திருக்கின்றது. வெற்றிபெறும் எழுத்தாளர்களுக்கு பணப் பரிசில்களுடன் நூல்களின் பிரதிகளும் வடலி வெளியீட்டினரால் வழங்கப்படும்.இலங்கையில் இது ஒரு முன்மாதிரியான முயற்சி. சிறுகதைப் போட்டி ஒன்றில் இந்தளவு தொகை பரிசாக வழங்கப்படுவது இலங்கையில் இதுதான் முதல் முறை. உலகம் முழுவதிலுமுள்ள இளம் எழுத்தாளர்கள் களத்தில் குதிக்கலாம்.