“வெள்ளம் ஏறிடுச்சாம்…..! வெள்ளம் ஏறிடுச்சாம்……!”
“வெள்ளம்…….எங்க ஏறிடுச்சு? விவரமா……..சொல்லு மணியம்….!”
“வேற எங்க ஜீவா ….! நம்ம…… தமிழ்ப்பள்ளியிலதான்…..வெள்ளம் ஏறிடுச்சாம்….!”
“ நேத்துப் பேஞ்ச செம மழைல…….வெள்ளம் ஏறாம இருக்குமா…..?”
தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது! பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’ வாளியில் அள்ளி வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர். பள்ளிப் பணியாளர்கள் மற்ற வகுப்புகளில் ஏறிப்போயிருந்த நீரைச் சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!