[ பதிவுகள் இணைய இதழின் நவம்பர் 2005 இதழ் 71 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]
முதலில் என்னுடைய அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன் தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல் ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும் அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம்? தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும்.? அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல்? ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா? யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா? தெரியாது.