மே – 01 – 2013; காலை 11 மணி
இடம் : Place des Fêtes. (Métro; Place des Fêtes)
தோழமையோடு அழைக்கின்றோம்!
சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு – பிரான்ஸ்.
Comité de Défence Sociale Internationale –France.
உலக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் மேதினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வல்லரசுகளோ கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டியபடி இருக்கிறது. ஐரோப்பாவில் இளம் சந்ததியினர் படித்துவிட்டு தொழில் வாய்ப்பு ஏதுமின்றி சூன்யமான எதிர்காலத்தைச் சுமந்தபடி இருக்கின்றனர். வங்கிகள் பொருளாதார நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை சந்தித்த காலம் போய், இப்போது நாடுகள் வங்குரோத்து நிலையில் விளிப்பில் தளம்பிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய கடனை பல நாடுகள் தவிர்க்க முடியா நிலையில் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் மீள முடியாக் கடன் சுமையை வருங்கால சந்ததிக்கு வழங்கியுள்ளன. உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம் மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின் பாலங்களின் கீழ் வசிக்கிறார்கள். ‘பொருளாதார நெருக்கடி’ என்று ஒற்றை வார்த்தையில் கூறப்படும் பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளையால் பணமும் மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்துள்ள நிலையில் மக்களின் வறுமையும், அழிவும் தவிர்க்கமுடியாத நியதியாகிவிட்டது.