1. சுடரும் இரகசியங்கள்!.
இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? ‘அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?’
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.