காத்திருந்த மரணத்தின் கால இடைவெளியில்- மஹ்மூத் தர்வீஷ் -இரு நூற்றாண்டு!

[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

மஹ்மூத் தர்வீஷ்“என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும்.
நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும்.
நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை.
என் மரணத்தின் பத்து
நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து
நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.”

மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை.  தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. அரபு இலக்கிய வெளியில் அந்த விகசங்களை கவிதைகளாக அதிக அளவில் வெளிப் படுத்தியவர் மஹ்மூத் தர்வீஷ். அவரின் கவிதைகள் எல்லா தருணங்களிலும் மரணப்பெருவெளியில், வாழ்விலிருந்து அந்நியமாக்கலுக்கு பணிக்கப்பட்ட, அனாமதேய சூழலின் விளைபொருளாக எழுந்தவையே.

Continue Reading →

இஸ்லாமிய நவீனப் பெண்ணியம்

[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

ஹெச். ஜி. ரசூல்1) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 15: பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’

பிரமிள்[பதிவுகள் இணைய இதழின் ஆகஸ்ட் 2007 இதழ் 92  இதழில் வெளியான பிரமிள் பற்றிய கட்டுரையினை இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவு செய்கின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் மகாகவி பாரதிக்குப் பின்னர் தமிழ் இலக்கிய உலகில் பாரதியைப் போன்றதொரு தேடல் மிக்க படைப்பாளிகளில் முதன்மையானவராகப் பிரமிளையே காண்கின்றோம். பிரமிளும் பாரதியைப் போல் தான் வாழ்ந்த சமூகத்தின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த அதே சமயம் இருப்பு பற்றிய தேடலிலும் தனது கவனத்தைச் செலுத்தியவர். அவரது கருத்துகள் எதுவாகவிருந்தபோதிலும் அவரது பன்முக வாசிப்பும், தேடலும், அவற்றை வெளிப்படுத்தும் அவரது படைப்புகளும் முக்கியமானவை. – பதிவுகள் -] அண்மையில் பிரமிளின் ‘வானமற்ற வெளி’ (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக ‘பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து’ என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, ‘தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது’  அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன. இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி ‘வானமற்ற வெளி’ நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.

Continue Reading →