காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான, மன்ஸார் அரங்கில், - வெங்கட் சாமிநாதன் -காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான, மன்ஸார் அரங்கில், பேராசிரியர் ராமானுஜம் ஒரு நாடகத்தை மேடையேற்றியிருந்தார். வெறியாட்டம் என்ற பெயரில். எனக்கு ராமானுஜத்தைத் தெரியும். மற்றும் மு.ராமசாமியைத் தெரியும். ராமானுஜம் தில்லி தேசீய நாடகப் பள்ளியில் அல்காஷியிடம் நாடகம் பயில வந்த காலத்திலிருந்தே நண்பர். தமிழ் நாட்டின் வளமுறைக்கு மாறாக நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்தவர்கள். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் வியந்து கொண்டவர்கள். தில்லி நாடகப் பள்ளிக்குப் பிறகு அவரை திருச்சூர் சங்கரப் பிள்ளையின் நாடகப் பள்ளி தான் அவரை ஏற்றுக் கொண்டது. தமிழ் நாடு கவலைப் பட்டதில்லை. அங்கிருந்து அவர் ஜி. சங்கரப் பிள்ளையின் ஒன்றிரண்டு நாடகங்களை தில்லிக்கு வந்து மேடையேற்றினார்  கறுத்த தெய்வத்தைத் தேடி அவற்றில் ஒன்று என் நினைவில் இருப்பது. ஆனால் சங்கரப் பிள்ளை நாடகாசிரியராக, என்னை அவ்வளவாக ஈர்த்தவரில்லை, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனாலும் சங்கரப்பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, மரியாதையை நான் கொடுக்க வேண்டும். ஜி. சங்கரப் பிள்ளை கேரள நாடக இயக்கத்தில் ஒரு முக்கிய புள்ளி. நாடக பள்ளி ஸ்தாபகராக, நாடகாசிரியராக, நாடக இயக்குனராக. மேலும் நாடகம் பயின்று வந்தவருக்கு நாடக வாழ்வு கொடுத்தவர். ராமானுஜத்தின் மேடை இயக்கம் என்னைக் கவர்ந்த போதிலும். அந்த நாடகம் பற்றி ஏதும் பெரிதாக எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. இந்த பிரசினை எங்களிடையே இன்று வரை தொடர்ந்து வருவது. நாடக இயக்குனராக, எந்த நாடகம் என்று எதைக் கொடுத்தாலும் அவர் அதை கேள்வி எழுப்பாது ஏற்பார். உழைப்பார். அதற்கு ஏதாவது சிகை அலங்காரம், உடை அலங்காரம் செய்து ஒப்பேத்தலாமா என்று முயல்வார். இதில் தான் எங்களுக்குள் பிரசினை எழும். நான் நாடக இயக்குனன். மேடையேற்றுவது என் வேலை என்பார். என்னவாக இருந்தாலும்,  எங்கள் mutual admiration-க்கு அதனால் ஏதும் பாதகம் விளைந்ததில்லை. இது தமிழ் மரபுக்கு முற்றிலும் மாறான விஷயம். . ஒரு வேளை தில்லியில் தொடங்கிய உறவாதலால் இது சாத்தியமாயிற்றோ என்னவோ. நான் முக்கால் தில்லி வாசி. அவர் பாதி கேரள வளர்ப்பில் வளர்ந்தவர். காரணங்கள் தேடினால் இப்படி ஏதாவது கிடைக்கலாம்.

Continue Reading →