நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும். ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
முதலாவது விமரிசனம்!
‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன? இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை போலிச்சடங்குகளாக்கி நாவலுக்கான சுவையை கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும் புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.
நண்பர் மீராபாரதியின் ‘பிரக்ஞை’ அண்மையில் வாசித்தேன். தமிழில் இதுபோன்ற நூல்களை எழுதுபவர்கள் ஆன்மிக அடிப்படையில் எழுதுவார்கள். அறிவியலை மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்து விடுவார்கள். மீராபாரதி இந்தத் தவறினைச் செய்யவில்லை. மேற்படி நூலில் பிரக்ஞை பற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே மீராபாரதி பிரக்ஞையினை அணுகியிருக்கின்றார். அவ்வப்போது பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களையும் குறிப்பிட்டிருப்பார். எதிர்காலத்தில் பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களின் அடிப்படையிலான நூலொன்றினை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். மேற்படி நூலில் ஒரு விடயம்தான் எனக்குச் சிறிது நெருடலாக இருக்கிறது. சிந்திக்கும் மனதை, உணர்வுள்ள மனதை பிரக்ஞை என்போம். அதனை நனவு மனமென்றும் கூறுவர். உளவியல் அறிஞர்களின் ஆய்வுகளின்படி மனித மனமானது இரு தளங்களை உள்ளடக்கியுள்ளது. சிந்திக்கும் மனம் (Conscious Mind), சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஆழ்மனம் (Unconscious Mind). இவ்விதமான மனதின் பிரிவுகளை மீராபாரதி முறையே பிரக்ஞை என்றும், பிரக்ஞையின்மை என்றும் குறிப்பிடுகின்றார். பிரக்ஞை என்பது சிந்திக்கும், உணரும் மனம் என்றால் (Conscious Mind), பிரக்ஞையின்மை என்பது சிந்திக்கும் மனம் அற்ற என்றுதான் பொருள்படும். அவ்விதம்தான் ஒரு சாதாரண மனிதர் புரிந்துகொள்வார். இதனை மீராபாரதியும் புரிந்துகொண்டிருக்கின்றார். அதனால்தான் அதுபற்றிய விளக்கமொன்றினையும் மேற்படி நூலின் பக்கம் 61இல் கீழ்வருமாறு தருகின்றார்: