– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்) பற்றிய சிறு குறிப்புகளிவை. –
அது ஒரு காலம். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் றீகல் (வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்திருந்த றீகல் இப்பொழுது இல்லை), மனோஹரா தியேட்டர்களில் மட்டுமே அதிக அளவில் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் அதில் ரியோ திரைப்பட அரங்கும் சேர்ந்து கொண்டது. யாழ் நகர மண்டபத்தின் பகுதியே அவ்விதம் ரியோ தியேட்டராக மாறியது. ஆங்கிலப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகள் பாடசாலை மாணவர்களால் நிறைந்திருக்கும். கலரி, இரண்டாம் வகுப்பு மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருக்கும். பாடசாலை விட்டதும் றீகலுக்கும், மனோஹராவுக்கும் மாணவர்கள் படையெடுப்பார்கள். அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன. அத்திரைப்படங்களினூடு எனக்கு அறிமுகமான நடிகர்கள் பலர். அந்தனி குயீன், சாள்டன் கெஸ்டன் (இவர்களெல்லாரும் என் அப்பாவின் காலகட்டத்து நடிகர்கள். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். எங்கள் காலகட்டத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்கள்.), மைக்கல் கெயின், ஜான் வெய்ன், கிறிஸ்தோபர் லீ, லீ வான் கிளீவ், ஜீன் போல் பெல் மாண்டோ , யூல் பீரயினர், சீன் கானரி (ஷான் கானரி), ஜீனா லொல்லோ பிரிஜிடா (இவரது ஒரேயொரு படத்தைத்தான் பார்த்திருக்கின்றேன். அது விக்டர் ஹியுகோவின் புகழ் பெற்ற நாவலான The Hunch Back a Notre Dame , தமிழில் அதன் தழுவல் கல்யாணகுமார் நடிப்பில் மணியோசை என்று வந்தது.), உர்சுலா அன்ரெஸ், சார்ள்ஸ் பிரோன்சன், அலன் டிலோன், ஜூலியனா ஜெம்மா, கேர்க் டக்ளஸ், ஹென்றி ஃபொண்டா, ஹரி கூப்பர் (இவர் எங்களது அப்பாவின் பால்ய காலத்து நாயகர்களில் ஒருவர்; எங்களது காலத்திலும் இவரது புகழ்பெற்ற திரைப்படமான High Noon திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன்.), கிரகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வூட், டெலிச விலாஸ் என்று பெரியதொரு நடிகர்/ நடிகைகளின் பட்டாளம் அறிமுகமானது அக்கால கட்டத்தில்தான். சிசில் டிமில் (Cecil DeMille ) ஹாலிவூட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்; இயக்குநர்; வசனகர்த்தா. ‘பென்ஹர்’ , ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ , ‘த கிரேட்டஸ்ட் ஷோ ஒன் ஏர்த்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர். இவரது மகளே அந்தனி குயீனின் முதல் மனைவி என்று அப்பா அடிக்கடி கூறுவார்.