சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன் புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.