முன்னர் அணிந்த உடைகளை என்ன செய்வோம்? என்பதற்கு அவரவர் தரப்பில் பதில்கள் இருக்கின்றன. பொதுவாக இல்லாதவர்களுக்கு கொடுப்பார்கள். இலங்கையில் ஒரு காலத்தில் பழைய ஆடைகளை கொடுத்துவிட்டு புதிய பாத்திரங்கள் வாங்குவதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். தற்பொழுதும் இந்த வழக்கம் இலங்கையிலிருக்கிறதா? என்பது தெரியாது. சுனாமி கடற்கோள் பாதிப்புக்கு உதவுமாறு அவுஸ்திரேலியா மெல்பனில் அன்பர்களிடம் வேண்டுகோள் விடுத்தபொழுது – பெட்டி பெட்டியாக பாவித்த உடைகள்தான் முதலில் வந்து குவிந்தன. ஏனைய நிவாரணப்பொருட்கள் அதன்பிறகுதான். இரண்டு கொள்கலன்களில் அவற்றை நிரப்பி கப்பல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு சேர்த்ததும் – பின்னர் அவற்றை கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்க பட்ட கஷ்டங்களும் நீண்டதொரு கதை. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் நூல்கள், பத்திரிகைகள், வார- மாத இதழ்கள் குவிந்துவிடும். இவற்றில் பத்திரிகைகள் இதழ்கள் இலங்கையில் எடைபார்த்து கிலோவுக்கு இன்னவிலை என்ற நிர்ணயம் இருக்கிறது. பழைய பேப்பர்கள் வாங்கும் கடைகள் இலங்கையில் இருக்கின்றன.