– பதிவுகள் நவம்பர் 2009 இதழ் 119இல் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு பற்றி வெளியான இக்கட்டுரை எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் மறைவையொட்டி, அவர் நினைவாக மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –
பிரேம்ஜி ஞானசுந்தரம் இடதுசாரிக்கருத்துகளால் கவரப்பட்ட ஒரு முற்போக்காளர். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்தி வந்தவர். 1954 தொடக்கம் அதன் செயலாளராக இருந்துவருகின்றார். அவர் 1950களில் இருந்து எழுதி வந்த கட்டுரைகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு நூல் கடந்த 27.09.2009 மாலை ‘ஸ்காபுரோ விலேச்’ சனசமூக நிலையத்தில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை திரு. வி.என். மதியழகன் தொகுத்து நெறிப்படுத்தினார். செல்வி ஆதிரை விமலநாதன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கனடிய தேசிய கீதத்தையும் இசைத்தார். தொடர்ந்து த.சிவபாலு அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலைமையுரையாற்றினார் அதிபர் கனகசபாபதி அவர்கள். தலைமையுரையில் ‘பிரேம்ஜீ அவர்கள் இலைமறை காயாக இருந்து செயலாற்றிய ஒருவர்; ஆரம்பத்திலவர் பரமேஸ்வராக்கல்லூரியில் கற்றபோது அவரைப் பரீட்சைக்குத்தோற்றுமாறு அவரது ஆசிரியர் கேட்டபோது அவர் நான் பரீட்டைஎடுக்கவரவில்லை அறிவுக்குப் படிக்கவே வந்தேன் என்றபோது அப்படியானால் இது உனக்கு உகந்த இடமல்ல என்று பாடசாலையில் இருந்துவெளியேற்றப்பட்டபோது, அவரது பெற்றோரும் அதனை ஒரு சவாலாக எடுத்து அவரை வேறு பாடசாலையில் சேர்ந்து படிக்கவைத்துள்ளனர் என்றால் பிரேம்ஜிக்குப் பெற்றோர் தந்த ஒத்துழைப்பு எத்தகையது என்பது எனக்க வியப்பைத்தருகின்றது. அது மட்டுமல்லாது கொழும்பில் நாமக்கல் கவிஞரைக் கண்டு நான் ஆங்கிலத்தை அல்ல தமிழைத்தான் கற்க விரும்புகின்றேன் என்று கூறி அவருடைய அனுமதியைப் பெற்று இந்தியாவிற்குச் சென்று தமிழைப் படித்துள்ளார் என்றால் அவரது மொழிப்பற்று, தேசப்பற்று என்பன பற்றிச் சொல்லத்தேவையில்லை. சென்னையில் வி.க. வ.ரா. சுவாமிநாத சர்மா ஆகியோருடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி சுவாமிநாத சர்மாவின் ஆலோசனைப்படி கொம்யூனிசக்கட்சியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1954 தொடக்கம் இயங்கி வருவதோடு மட்டுமன்றி பல்வேறுபட்டி பிரிவினரையும் இணைத்துப் பாலமாகச் செயற்பட்டவர். சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டி பல வெளிநாட்டு எழுத்தாளர்களும் இணைத்து பெரிய ஒரு மகாநாட்டைக் கூட்டியவர்’ என்று அவரைப்பற்றிய சிறப்புக்களை எடுத்துரைத்தார்.