தமிழ்நாட்டில்; நாட்டியம், இசை போன்ற கலைத்துறைகளில் பிரபல்யமாகப் பேசப்படும் ஸ்ரீமதி கலைமாமணி மாலதி டொமினிக் அவர்களின் பெருமுயற்சியில் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்துடன் இன்டோ பிரிட்டிஷ் நாட்டிய, இசைவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முனைவர் ருக்மணிதேவி அருண்டேல் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் கலைமாமணி பாலமுரளிக் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, நடிகை கலைமாமணி பி.எஸ்.சச்சு போன்ற தமிழ்நாட்டின் மிகப்பெரும் பிரபல்யக் கலைஞர்களின் வருகை மிகச்சிறப்பாகவே அமைந்திருந்தது. இத்தகைய பெரும் கலைஞர்களின் மத்தியில் இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகளில் இலங்கையில் கலைக்குடும்பத்தில் பிறந்த ‘நாட்டியக் கலாஜோதி’ செல்வி பார்கவி பரதன் தனது அனுபவம் மிக்க நர்த்தகி போன்ற பாவங்கள், ஜாலங்களால்; இந்தியக் கலைஞர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார். தோற்றப் பொலிவோடு திகழ்ந்த செல்வி பார்கவி பரதன் புஷ்பாஞ்சலியை சங்கீரணசாப்லும், தில்லானாவை மிஸ்ரசாப்லும் தாளக்கட்டுப்பாடோடு வெளிப்படுத்தியவிதம் கலைஞர்களைப் பெரிதும் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது. முருகப் பெருமான் மீதான அவர் ஆடிய வர்ணம், அபிநயமும், பாவமும், நடிப்பும் அனுபவம் மிக்கவர் போன்ற உணர்வை ஏற்படுத்தி ரசிகர்களை அனுபவிக்க வைத்தது. இணுவில் மண்ணிற்கு பெருமை தேடித்தந்த பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் அவர்கள் இயற்றிய பாடலை ஸ்ரீமதி கிரிஜா ராமசுவாமி அவர்களின் இசையிலும்;;, லண்டனிலிருந்து சென்ற எம். பாலச்சந்தினின் மிருதங்கத்திலும், விநோதினி பரதன் அவர்களின் நட்டுவாங்கத்திலும் அவளின் பாதங்கள் பகிர்ந்துகொண்ட ‘பதத்தின்’ விதம் மக்களை லயிக்க வைத்தது.
வந்தவாசி.பிப்.18. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழாவில், ஒரு இனத்தையும் அதன் பண்பாட்டையும் அழிந்து விடாமல் காப்பதில் அந்த இனத்தின் தாய்மொழியே முக்கிய பங்காற்றுகிறது என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் க.சண்முகம், பெ.பார்த்திபன், பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘தாய்மொழியாம் தமிழ்மொழியில் கையெழுத்திடுவோம்’ இயக்கத்தை தமிழில் கையெழுத்திட்டு, வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் ம.சு.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, தாயைப் போற்றி பாதுகாக்காத சமூகமும், தாய் மொழியைக் கொண்டாடாத இனமும் முன்னேற முடியாது என்று பேசினார். மூத்தத் தமிழறிஞருக்கான பாராட்டு மேனாள் தமிழாசிரியர் க.கோவிந்தனுக்கு செய்யப்பட்டது.