– நாடக, திரைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்தினின் மறைவை ஒட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய இக்கட்டுரையினையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பிய குரு அரவிந்தனுக்கு நன்றி. – பதிவுகள் –
கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.
அண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் கதாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.