எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) கவிதைகள்!
1. நுழைதல்
எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று
பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது
நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்