முனை 1
நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில் தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன. யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம். கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.