– பதிவுகள் இணைய இதழில் 2005 காலகட்டத்தில் விவாதங்கள் பல நடைபெற்றன. எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக வாதிட்டுக்கொண்டார்கள். முட்டி மோதிக்கொண்டார்கள். இங்கு வெளிப்படும் கருத்துகள் பதிவுகள் இதழின் கருத்துகளல்ல. வாதங்களில் பங்குபற்றிய கட்டுரையாளர்களின் கருத்துகளே. உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்று கட்டுரையொன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அது தொடர்பாக R.P. ராஜநாயஹம் ‘சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! ‘ என்றெழுதிய கட்டுரையும் , அதனைத் தொடர்ந்து வெளியான எதிர்வினைகளும் ஒரு பதிவுக்காக ‘பதிவுகள் அன்று’ பகுதியில் மீள்பிரசுரமாகின்றன. – ஆசிரியர் –
தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! – R.P. ராஜநாயஹம் –
தமிழ் இலக்கியச் சூழலை நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க்களமாக்கி அழிப்பதுதான் தன்னுடைய நோக்கமென்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார். உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்பதாக இவர் எழுதியுள்ள கட்டுரை இவருடைய நேர்மையின்மையின் வெளிப்பாடு. ‘அசோகமித்திரன் – 50’ ஒளிப்பேழையை காலச்சுவடு மூலமாக கிழக்கு பதிப்பகத்திடமிருந்து பெற்று அந்த நிகழ்ச்சியை முழுமையாக, மூன்றுமுறை ஆழ்ந்து பார்த்தேன். சுந்தர ராமசாமி தன் பேருரையில் அசோகமித்திரனுக்கு பூரண மஹா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்து கௌரவித்திருக்கிறார். பேசியவர், பேசப்பட்டவர் இருவரையும் பற்றி எண்ணும்போது தியாகய்யரின் ஸ்ரீராகக் கீர்த்தனை ‘எந்த்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு’ என்நெஞ்சை நிறைத்துப் பொங்கி வழிந்தது. சுந்தர ராமசாமி பேசியதின் சுருக்கம் கீழ்வருமாறு: ‘மிக முக்கியமானவராக அசோகமித்திரனை நான் கருதுகிறேன். நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். இந்நிகழ்ச்சிக்காக இப்போது எண்பது கதைகளை என்னால் வாசிக்க முடிந்தது. இந்த சிறுகதை உருவத்தின் மீது இந்த கலைஞன் கொண்டிருக்கிற தீராத ஆசை. ஒரு நுட்பமான கலைஞனைப் பற்றிப் பேச நாம் இங்கே கூடியிருக்கிறோம். அசோகமித்திரன் 1950 வாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறார். இலக்கிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்களின் பாதிப்பு அவரிடம் இல்லை. அவருடைய எழுத்தால் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களை அவரால் கவரமுடியவில்லை. இடதுசாரி, முற்போக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றவர்களுக்கு இவருடன் உறவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. வாழ்க்கை பற்றி ஓயாத கவலை, வாழ்க்கை திருப்தியாக இல்லை என்ற இவருடைய அக்கறையை அவர்கள் பரிசீலனை செய்யாதது ஏன்? வாசகர்கள் இரண்டு வகை 1. இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்கள். 2. விசுவாசமான வாசகர்கள். இவர்களில் இலக்கியத்தை நேசிக்கிற வாசகர்களால் இனி அசோகமித்திரனின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். அசோகமித்திரனின் படைப்புகள் சுவாரசியமாக, உறுத்தல் இல்லாதவை. வாழ்க்கையின் சாராம்சத்தை படைப்பாக மாற்ற இவரால் முடிந்திருக்கிறது’.